You are here

கிரகங்களின் திசை பலன்

கிரகங்களின் திசை பலன்

jothidam
0
by aadhiguru

சூரியன் முதல் சனி முடியவுள்ள ஏழு கிரகங்களும் தத்தமது தசா நடைபெறும்பொழுது என்னென்ன பலன்களையளிக்கின்றன என்பதை வராகமிகிரரின் பிருஹஜ் ஜாதகத்தின் மூலமாக அறியலாம். முதலில் ஒரு கிரகத்தின் தசை நல்லபலன்களை அளிக்குமா அல்லது கெட்ட பலன்களைக் கொடுக்குமா என்பதை அறிந்து கொள்ளச் சில குறிப்புகளைக் கொடுத்திருக்கின்றார். அதை முதலில் பார்ப்போம்.

தனது உச்ச பாகையில் இருக்கும் கிரகம் அல்லது ஷட்பலத்தில் மிகுந்த பலம் வாய்ந்த கிரகம் கொடுக்கின்ற தசைக்கு ‘சம்பூர்ணா’என்ற பெயர். இத்தசை மிகுந்த நற்பலன்களைக் கொடுக்கின்றது.
எந்தவித பலமும் இல்லாமல் இருக்கும் கிரகத்தின் தசைக்கு ‘ரிக்தா’என்ற பெயர். இத்தசை மிகுந்த கஷ்டத்தைக் கொடுக்கின்றது.
பரமநீச பாகையில் இருக்கும் கிரகம் அல்லது நவாம்சத்தில் சத்துரு வீட்டில் இருக்கும் கிரகத்தின் தசைக்கு ‘அனிஷ்டபலா’என்ற பெயர். இத்தசையில் பொருள் இழப்பு மட்டுமின்றி உடலில் ஆரோக்யக் குறைவும் ஏற்படுகின்றது.
உச்ச வீட்டை விட்டு நீச்ச வீட்டை நோக்கிச் செல்லும் கிரகத்தின் தசை ‘அவரோஹி’என்ற பெயரைப் பெறுகின்றது. அவரோஹிணீயாக உள்ள கிரகம் மித்துரு அல்லது உச்ச நவாம்சத்தைச் சேருமானால் ‘மத்யா’என்ற பெயரைப் பெற்று அசுப சுப பலன்களை ஒரு சேரக் கொடுக்கும்.
நீச்ச வீட்டைவிட்டு உச்ச வீட்டை நோக்கிச் செல்லும் கிரகத்தின் தசை ‘ஆரோஹிணீ’ என்ற பெயரைப் பெறுகின்றது. இந்தக் கிரகம் நீச்ச சத்ரு நவாம்சத்தைச் சேருமானால் ‘அதமா’என்ற பெயரைப் பெற்று சுப பலனைக் கொஞ்சமாகக் கொடுக்கின்றது.

சூர்ய தசையின் பலன்கள்:

ஒருவன் சுபபலன்களைத் தரும் சூர்ய தசையில் வாசனைத் திரவியங்கள், யானைத் தந்தம், விலங்குகளின் தோல், தங்கம் இவற்றை விற்பனை செய்வதாலும், கொடூரமான காரியங்களைச் செய்வதாலும், அரசனைச் சார்ந்து இருப்பதாலும், யுத்தம் செய்வதாலும் பணத்தைச் சேர்க்கின்றான். சூர்யதசை காலத்தில் நன்மை தீமைகளால் பாதிக்கப்படாமல் ஸ்திதப் பிரக்ஞனாக இருத்தல், புகழ், தொடர்ந்த முயற்சிகளால் மேன்மை ஆகியவை ஒருவனைச் சேர்கின்றன.

அசுபபலன்களைத் தரும் சூர்யதசையின் போது மனைவி, பிள்ளைகள் தன்னிடமுள்ள செல்வம், எதிரிகள், ஆயுதம், நெருப்பு, அரசன் இவர்களால் அதிகமான ஆபத்துக்களும், கெட்ட விஷயங்களுக்காக பணச் செலவுகளும், வேலைக்காரர்களோடு சண்டையும், இருதயம், வயிறு இவற்றில் வியாதிகளும் வருகின்றன.

வேலைக்காரர்களோடு கலகம் என்பதை அலுவலகத்தில் உள்ள கீழ்நிலை அதிகாரிகளோடு தகராறு
 என்றோ, தொழிலதிபராக இருந்தால் தொழிற்சங்கத்தோடு தகராறு என்றோ புரிந்துகொள்ள வேண்டும்.

சந்திரதசையின் பலன்கள்:

சுபமான சந்திரதசையில் வேதமந்திரங்கள், பிராமணர்கள் மூலமும், தயிர் நெய், வெல்லம், துணி, பூக்கள், எள், உணவுப் பொருட்கள் ஆகியவற்றின் மூலமும் செல்வஞ் சேர்கின்றது. அசுபமான சந்திர தசையில் சோம்பல், மிதமிஞ்சிய தூக்கம், பிரபலமானவர்களுடனும் சுற்றத்தார்களுடனும் விரோதம், கூடியும் குறைந்தும் வரும் செல்வம், பெண் குழந்தைகளைப் பெறுதல், தெய்வம், மேலோர் முதலானவர்களிடம் அன்பு ஆகியவை கிடைக்கப் பெறுகின்றன.

செவ்வாய் தசையின் பலன்கள்:

சுபமான செவ்வாய் தசையில் எதிரிகளை வெல்லுதல், அரசன், இளையசகோதரர்கள், பூமி இவற்றால் செல்வம் கிடைக்கப் பெறுகிறது. அசுபமான செவ்வாய் தசையில் பெற்ற பிள்ளைகள், சிநேகிதர்கள், மனைவி, சகோதரர்கள் இவர்களோடு மிகுந்த மனஸ்தாபமும், கற்றறிந்த மேலோர், குரு இவர்களை வெறுக்கின்ற மனோபாவமும் ஏற்படும். மேலும் தாகம், பித்தம், ஜ்வரம், அங்கங்களில் தளர்ச்சி, பிற பெண்டிரைச் சேர்வதால் வரும் நோய்கள், கெட்டவர்களோடு நட்பு, நீதிக்குப் புறம்பான காரியங்களில் பற்று, கடுமையாகப் பேசி கோபத்தோடு நடந்துகொள்ளுதல் இவைகளும் ஒருவனைச் சேர்கின்றன.
 
புதன் தசையின் பலன்கள்:

சுபமான புதன்தசையில் தூது செல்லுதல், நண்பர்கள், குரு, பிராமணர்கள் மூலம் பணமும், கற்றறிந்த மேலோர்களிடமிருந்து புகழ்ச்சியும், பெருமையும் கிடைக்கின்றன. துத்தநாகம், வெண்கலம், தங்கம், குதிரை, நிலம் இவற்றின் மூலம் பண வரவும், எல்லோருடைய நட்பைப் பெறுவதில் சாமர்த்தியமும் தர்மகாரியங்களைச் செய்து முடிக்கும் திறமையும் கிடைக்கின்றன. அசுபமான புததசையில் எல்லா முயற்சிகளும் பயனற்றவை ஆகின்றன. சிறைவாசம், வாதம், பித்தம், சிலேஷ்மம் ஆகியவற்றால் வியாதி இவை கிடைக்கின்றன.

வியாழ தசையின் பலன்கள்:

சுபமான குரு தசையில் நல்ல குணங்களின் பெருக்கும், புத்தியில் விருத்தியும் ஏற்படும். வேதம் ஓதுதல், நீதி சாஸ்திரங்கள், அரசன் இவர்கள் மூலமாகச் செல்வம் சேரும். நல்ல ஆபரணங்கள், உடைகள், வாகனங்கள் அரசனோடு  சிநேகிதம் இவையும் கிட்டுகின்றன. அசுபமான குரு தசையில் காதில் வியாதியும், புத்தியால் யூகித்தல், பிரவேசிக்கக் கூடாத இடத்தில் பிரவேசித்தல் இவை மூலமாகக் கஷ்டங்களும், தர்மத்தைவிட்டு விலகியவர்களுடன் விரோதமும் ஏற்படும்.

வேதம் ஓதுதல், நீதி சாஸ்திரங்கள் இவை மூலமாகச் செல்வம் சேரும் என்பதைத் தேசத்துக்கான சட்டங்களை வகுக்கும் வல்லுனர்களாகவோ, அவற்றை அமல்படுத்தும் நீதியரசர்களாகவோ பணிபுரிதல் என்பதாக எடுத்துக்கொண்டு அந்த உத்யோகத்தைக் கொண்டு வரும் தசை என்றும் சொல்லலாம். புத்தியால் யூகித்தல் என்பதைப் பங்குச்சந்தை முதலீடு செய்வது என்று எடுத்துக் கொண்டால் அசுபமான குரு தசையில் பங்குச் சந்தை வணிகம் மூலம் இழப்பு வரலாம் என்று புரிந்துகொள்ள வேண்டும். பிரவேசிக்கக் கூடாத இடத்தில் பிரவேசித்தல் என்பதைத் தனக்கு பழகிப் போன துறையை விட்டு பரிச்சயமில்லாத துறையில் நுழைந்து பணத்தை இழத்தல் என்று புரிந்து கொள்ள வேண்டும். தர்மத்தை விட்டு விலகியவர்களுடன் விரோதம் என்பதைத் தற்காலத்தில் நிறைய விஷயங்களோடு பொருத்திப் பார்க்கலாம். நுகர்வோர் நீதிமன்றங்களில் வழக்குத் தொடுப்பவர்கள், பொதுநல வழக்குத் தொடுப்பவர்கள் இவர்களெல்லாம் அசுபமான குருவின் தசை நடப்பவர்களாக இருக்கக் கூடும்.

சுக்கிர தசா பலன்கள்:

சுபமான சுக்கிர தசையில் சங்கீதத்தில் பிரியம், வாசனைப் பொருட்கள், உணவுப் பொருட்கள், மதுபானங்கள், துணி, ரத்தினக்கற்கள், மேஜை, படுக்கை இவைகளை விற்பனை செய்வதால் கிடைக்கும் செல்வம் இவை ஒருவனைச் சேர்கின்றன. உறவினர்கள் மற்றும் நண்பர்களால் லாபங்கள் கிடைக்கும். விற்றல், வாங்கல் செய்வதில் சாமர்த்தியம் கூடும். விவசாயம் புதையல் இவை மூலமாகவும் செல்வம் சேரும். அசுபமான சுக்ரதசையில் அரசு, பொதுமக்கள், நண்பர்கள் இவர்களோடு விரோதம் ஏற்படும். மேலே என்னென்ன பொருட்களால் செல்வஞ் சேரும் என்று சொல்லப்பட்டதோ அத்தனை மூலமாகவும் பணம் இழப்பு ஏற்படும். புதையல் என்பதை லாட்டரிச்சீட்டு, குதிரைப் பந்தயம் மூலம் கிடைக்கும் செல்வம் என்று எடுத்துக்கொள்ளலாம்.

சனி தசை பலன்கள்:

சுபமான சனி தசையில் கிராமம், நகரம் இவைகளை நிர்வாகம் செய்யும் தலைவராகவோ, நகர்மன்றத் தலைவராகவோ, மந்திரியாகவோ ஆகும் வாய்ப்பு வரும். வயது முதிர்ந்த பெண்களின் சிநேகம் கிடைக்கும். பறவைகள், எருமைகள், ஒட்டகம் முதலியவற்றால் பணத்தின் பெருக்கு ஏற்படும்.

அசுபமான சனி தசையில் கபம், பொறாமை, வாயு, கோபம், தெளிவற்ற மனநிலை, சரீரத்தில் சுகக்குறைவு இவை உண்டாகும். வேலைக்காரர்கள், மனைவி மற்றும் மக்களிடமிருந்து அவமரியாதை உண்டாகும். சில நேரங்களில் உடலின் சில பாகங்களை இழத்தலும் நேரிடும்.

ஒரு கிரகத்தின் தசா நடைபெறும் பொழுது என்ன பலன் சொல்லப்பட்டுள்ளதோ, அதே பலனைத்தான் அந்தக் கிரகத்தின் புக்தி நடைபெறும் பொழுதும் சொல்ல வேண்டும். ஒரு கிரகத்தின் தசாபலன் அக்கிரகம் நவாம்ச சக்கரத்தில் எந்த ராசியில் உள்ளது என்பதைப் பொறுத்து அமைவதைப் போலவே, துவாதசாம்சச் சக்கரத்தில் அக்கிரகம் இருக்கும் ராசியைப் பொறுத்தும் அமைகின்றது. அதுபோல ஒரு கிரகத்தின் தசை ஆரம்பிக்கும் பொழுது உள்ள கிரக நிலைகளைப் பொறுத்தும் அக்கிரகத்தின் தசாபலன்களில் மாற்றம் ஏற்படும். ஒரு தசை ஆரம்பிக்கும் போது சந்திரன் இருக்கும் ராசியைப் பொறுத்தும் பலன்கள் அமைகின்றன. சந்திரன் கடகத்தில் இருக்கும் போது ஒரு தசை ஆரம்பிக்குமானால் அத்தசை சுபதசையாகும். சந்திரன் புதனின் ராசியான மிதுனம், கன்னி இவைகளில் இருந்தால் அத்தசை கல்வி, நண்பர்கள், பணம் இவற்றைத் தரும். சுக்கிரனின் வீடுகளான ரிசபம் துலாத்தில் இருந்தால் நல்ல ஆகாரத்தைத் தரும். குருவின் வீடான தனுசு மீனம் இவைகளில் இருந்தால் மரியாதை, சுகம் இவற்றை உண்டு பண்ணும். சனியின் வீடான மகர கும்பங்களில் இருந்தால் கெட்டவர்களின் சகவாசத்தைத் தரும். (முக்கியமாகப் பெண்கள்) சிம்மத்தில் இருந்தால் காடு, பயிர்த் தொழில் இவற்றால் லாபமுண்டாகும். செவ்வாயின் வீடான மேஷ, விருச்சிகத்தில் சந்திரனிருந்தால் பெண்களுக்குத் தோஷத்தைக் கொண்டு வரும்.

பாபக் கிரகங்களின் இராசிகளில் சந்திரன் இருக்கும் போது ஆரம்பித்த தசாபுக்திகளுக்கே கெட்ட பலன் சொல்லும் போது, சந்திரன் பாபர்களுடன் கூடியிருக்கும் போது ஆரம்பிக்கும் தசை நிச்சயம் நல்ல பலனைத் தராது என்ற முடிவுக்கு வரவேண்டும்.

மேற்கூறிய தசா புக்தி பலன்கள் எல்லாம் தற்காலம் சோதிடர்கள் கூறிவரும் நட்சத்திர தசைகளுக்குப் பொருந்தாது.  இந்த தசாபுக்திகள் யாவுமே ஒவ்வொரு கிரகமும் கொடுக்கும் ஆயுளைக் கண்டறிந்து அந்த வருஷம், மாதம், நாள், நாழிகை இவற்றையே தசாகாலமாகக் கொண்டு சொல்லும் பலன்களுக்கு மட்டுமே பொருந்தும். இவையெல்லாம் நன்கு கணிதங்கற்ற சோதிட மேதைகளால் மட்டுமே இயலும். இவ்வாறு தசா ஏற்படுத்தும் முறைகளை மட்டுமல்ல இப்படியொரு கணக்கு உள்ளது என்பதையே அறியாத சோதிடர்கள்தான் இப்பொழுது பெரும்பான்மையாக இருக்கின்றார்கள். சோதிட ஆர்வலர்கள் கணிதங்கற்ற சோதிடர்களைத் தேடிச் சென்று கற்கவும், கற்றபடி அதைப் பரிட்சித்துப் பார்க்கவும் முயற்சிகள் செய்வார்களேயானால் சோதிட சாஸ்திரம் இழந்த பெருமையை மீண்டும் பெறும்.

Comments

Add new comment