You are here

ஜூவசமாதி

ஜூவசமாதி

ஆன்மிகம்
0
by aadhiguru

ஜீவசமாதி என்றால் என்ன... திருமூலர் வகுத்துள்ள இலக்கணங்கள்!
 சு.பொன்மணிஸ்ரீராமன்

ஜீவசமாதி என்பது ஜீவன் + சமம் + ஆதி. அதாவது ஆதியாகிய இறைவனிடம் இருந்து வந்த ஜீவனை சமன்செய்தல் என்றுப் பொருள். ஞானிகள், யோகிகள், சித்தர்கள், சாதுக்கள் போன்றவர்கள் சித்தம் என்னும் அறிவைக் கொண்டு மனதை வெல்வதற்கு வாழ்வில் கடுமையான ஒழுக்கங்களையும், உயர்ந்த தவநெறிமுறைகளையும் தனது இருகண்களினும் மேலாகப் பின்பற்றி வருகின்றனர். உடலையும், உள்ளத்தையும் மாசின்றி பேணிக்காக்கின்றனர்.

அலைமோதும் ஜீவனை ஒருநிலைப்படுத்தி, தன்னையே உயர்ந்தவனாக ஆக்குவதே சித்தர் கலை. 'தன்னை அறிய தனக்கொரு கேடில்லை' என்கிறார் திருமூலர். இறைவனை அடைய அனைவரும் சொன்ன ஒரே வழி, 'அன்புமார்க்கம்'தான். கடவுளைக் காண முயன்று கொண்டிருப்பவர்கள் பக்தர்கள். ஆனால், கண்டு தெளிந்தவர்கள் சித்தர்கள்.

ஜீவசமாதி

யோக் என்றால் சமஸ்கிருதத்தில் வழி என்று பொருள். இறைவனைக் காணும் வழியைக் கண்டவனே யோகி. பாவங்களை அகற்றக்கக்கூடிய, துன்பங்களை களையக்கூடிய, இறைவனைப் பற்றிய சிந்தனையுடன் சின் அல்லது ஆதி போன்ற முத்திரையில், யோகி அமரும் ஆசிரமம்தான் யோகாஸ்ரமம் எனவும் கூறுகின்றனர்.

சமாதியடைவது என்பது முடிவு பெறும் ஒரு நிலையே அல்ல. இறைவனால் நியமிக்கப்பட்ட காரியங்களை ஒருகாலத்திற்க்குள் நடத்தி காட்டிய பிறகு முக்தி அடைவதே ஆகும். ஆனால், அந்த ஞானியின் ஆற்றலும், அருளும் என்றுமே இந்த அண்டத்தில் நிலைத்திருக்கச் செய்துவிட்டு, இறைவனோடு இரண்டறக்கலக்கின்றனர். சமாதிநிலையில் இருப்பதும் யோகநெறியின் உச்சநிலை என உரைக்கப்படுகிறது.

இவர்களின் உடல், மன இயக்கம் மட்டுமே நின்று போயிருக்குமே தவிர உயிர் உடலை விட்டுப் பிரிவதில்லை என்கிறார் திருமூலர். இறைவனோடு இறைவனாக கலந்துவிட்ட, இத்தகைய மேன்மக்களை இவர்களது சீடர்கள் உதவியோடு ஜீவசமாதிக்கான ஒரு குறிப்பிட்ட முறையான சடங்குளைப் பின்பற்றி அவர்களின் உடலை சமாதி செய்யவேண்டும். இவ்வகையான முறைக்கு 'சமாதிக்கிரியை' என்று பெயர். எந்த இடங்களில் ஜீவசமாதி அமைக்கவேண்டும் என்ற குறிப்புகளையும், எவ்வாறு குழிதோண்டுவது என்றும், நிலவறை அமைக்கும் வழிமுறையினையும், உடலை எப்படி இருத்துவது போன்ற அத்தனை சடங்குகளைப் பற்றியும் தனது திருமந்திரம் என்னும் நூலில் திருமூலர் காரண காரியத்துடன் பாடல்கள் வழி விளக்குகிறார்.

தெளிந்த ஞானம் கொண்ட தவயோகிகளின் உடலை ஜீவசமாதி அமைத்திட வேண்டியதின் அவசியத்தை வேறு எவரும் சொல்லாத வகையில் அழுத்தமாகக் கூறியுள்ளார்.

ஜீவசமாதியின் அவசியம்:

“அந்தமில் ஞானி அருளை அடைந்தக்கால்
அந்தவுடல் தான் குகைசெய் திருத்திடில்
சுந்தர மன்னரும் தொல்புவி யுள்ளோரும்
அந்தமி லின்ப அருள்பெறு வாரே.

புண்ணிய மாமவர் தம்மைப் புதைப்பது
நண்ணி யனல் கோக்கில் நாட்டில் அழிவாகும்
மண்ணில் அழியி லலங்கார பங்கமா
மண்ணுலகெல்லாம் மயங்கும் அனல் மண்டியே…”

அதாவது ஜீவசமாதி அடைந்த யோகியின் உடலை குழி தோண்டி அதில் இருத்தி புதைக்கவேண்டும். அதுவே புண்ணியமும் ஆகும். இதற்கு மாறாக தீயிட்டு கொளுத்தினால் நாட்டில் பஞ்சம் ஏற்படும். பல கேடுகள் விளையும். மக்களுக்கும் பகைமை உண்டாகி ஒருவரையொருவர் அழித்துக் கொள்வர்.

“அந்தமில் ஞானிதன் ஆகம் தீயினில்
வெந்திடின் நாடெலாம் வெப்புத் தீயினில்
நொந்தது நாய்நரி நுகரின் நுண்செரு
வந்துநாய் நரிக்குண வாகும்வை யகமே.

எண்ணிலா ஞானி உடலெரி தாவிடின்
அண்ணல் தன் கோவில் அழலிட்ட தாங்கொக்கும்
மண்ணில் மழைவீழா வையகம் பஞ்சமாம்
எண்ணரும் மன்னர் இழப்பா ரரசே.”….

ஞானியின் உடலை முறையாக புதைக்காமல், கேட்பாரற்று நிலத்தின் மேல் அழிந்து போக விட்டுவிட்டால், அந்நாட்டில் மழையின்றி பெரும் பஞ்சம் ஏற்படும். அரசனும் தன் பதவியை இழப்பான். நாட்டுமக்களும் அழிவர். எனவே ஞானியரின் உடலை சமாதிக்கிரியை என்னும் முறையான சடங்கின்படி புதைப்பதே சிறந்தது என்கிறார் திருமூலர்.

சமாதிக்கான இடத்தேர்வு குறிப்புகள்:

தன்மனை சாலை குளங்கரை ஆற்றிடை
நன்மலர்ச் சோலை நகரினற் பூமி
உன்னரும் கானம் உயர்ந்த மலைச்சாரல்
இந்நிலந் தான்குகைக்கு எய்து மிடங்களே.

திருமூலரின் பாடல்களில் குறிப்புகளாக, மனை, சாலையின்பக்கம், குளக்கரை, ஆற்றின்படுகை, மணம் கமழும் மலர்வனம், நகரில் நல்லதோர் இடம், அடர்ந்தகாடுகள், மலைச்சாரல் போன்ற இடங்கள் ஜீவசமாதி அமைக்க உகந்த இடங்களாக திருமூலர் கூறுகிறார்.

நிலவறையும் சடங்குகளும்:

ஞானியரின் உடலை வைக்கும் இடமே நிலவறை என்று பெயர். இந்நிலவறை எவ்வாறு அமையவேண்டும் என்பதையும் திருமூலர் கூறுகிறார்.

நவமிகு சாணாலே நல்லாழஞ் செய்து
குவைமிகு சூழவைஞ் சாணாகக் கோட்டித்து
அவ மிகு குகைமுக் கோணமுச் சாணாக்கிப்
பவமறு நற்குகை பத்மா சனமே.

ஒண்பது சாண் ஆழத்திற்க்கு ஒரு குழியைத் தோண்ட வேண்டும். வெட்டி எடுத்த மண்ணை அந்தக் குழியைச் சுற்றிலும் ஐந்து சாணுக்கு அப்பால் வளைத்துக் கொட்ட வேண்டும். முக்கோண வடிவமாக அந்த குகையைச் செய்ய வேண்டும். அதன் பக்கங்கள் மூன்று சாண் அளவு இருக்க வேண்டும். அதில் அந்த ஞானியின் உடலைப் பத்மாசனத்தில் இருத்த வேண்டும். இவ்விடத்தை குகை அல்லது நிலவறை என்பர்.

பஞ்ச லோகங்கள் நவமணி பாரித்து
விஞ்சப் படுத்ததன் மேலா சனமிட்டு
முஞ்சிப் படுத்து வெண்ணீ றிட்டதன் மேலே
பொன் செய் நற்சுண்ணம் பொதியலுமாமே.

நள்குகை நால்வட்டம் படுத்தன் மேற்சாரக்
கள்ளவிழ் தாமம் கலாபம்கத் தூரியும்
தெள்ளிய சாந்து புனுகுபன் னீர்சேர்த்து
ஒள்ளிய தூபம் உவந்திடு வீரே.

பொன், வெள்ளி, செம்பு, ஈயம், இரும்பு ஆகிய பஞ்சலோகங்களையும், நவ ரத்தினங்களையும் முக்கோணவடிவில் குழியின் ஆழத்தில் பரப்பி, அதன் மீது தர்ப்பை புற்களை விரித்து, வெண்ணீற்றையும், பொன்னிறசுண்ணப்பொடியையும் கொட்டி நிரப்பி இருக்கை அமைக்க வேண்டும். மலர்கள், சந்தனம், புனுகு, கஸ்தூரி மற்றும் பன்னீர் கலந்து குழியைச்ச்சுற்றி சதுரமாய் தெளித்து, தீபம் ஏற்றி வைத்துவிட வேண்டும்.

சிவபெருமான்

ஓதிடும் வெண்ணீற்றால் உத்தூளம் குப்பாய
மீதினி லிட்டா சனத்தின் மேல் வைத்துப்
போதறு சுண்ணமு நீறும் பொலிவித்து
மீதில் இருத்தி விரித்திடு வீரே.

விரித்தபின் நாற்சாரும் மேவுதல் செய்து
பொரித்த கறிபோ னாகமிள நீரும்
குருத்தலம் வைத்தோர் குழைமுகம் பார்வை
தரித்தபின் மேல் வட்டம் சாத்திடு வீரே.

மீது சொரிந்திடும் வெண்ணீறும் சுண்ணமும்
போது பல கொண்டு தர்ப்பைப்புல் வில்வமும்
பாத உதகத்தால் மஞ்சனஞ் செய்துபார்
மீதுமூன் றுக்குமூன் றணிநிலம் செய்யுமே.

ஆதன மீதில் அரசு சிவலிங்கம்
போதும் இரண்டினி லொன்றைத் தாபித்து
மேதகு சந்நிதி மேவு உத்தரம் பூர்வம்
காதலிற் சோடசம் காண்உப சாரமே.

ஒரு சட்டை போலத் திருநீற்றை ஞானியின் உடலின் மீது பூச வேண்டும். அவர் உடலை இருக்கையின் மேலே இருத்த வேண்டும். மலர்கள், அறுகம்புல், நறுமணப்பொடி, திருவெண்ணீறு ஆகியவற்றை உடல் மேல் அணிவிக்க வேண்டும். குகையில் வைத்து நாலாப் புறங்களிலும் மண்ணை விரித்துச் சமமாக்க வேண்டும். மேலே சொன்ன முறைகளை எல்லாம் செய்த பின்னர் குழியினுள் பத்மாசனத்தில் இருத்தப் பட்ட குருவின் திருவடியில் பொரிக்கறி , இளநீருடன் கூடிய உணவு ஆகியவற்றை வைத்து நிவேதினம் செய்ய வேண்டும் என்கிறார் திருமூலர். அதைத் தொடர்ந்து அவரின் முகம், காதணி, கண் ஆகியவைகளை மூடி, ஞானியின் உடல் மீது பரிவட்டம் சாற்றிட வேண்டும். இறுதியாக திருவெண்ணீறு, நறுமண சுண்ணப் பொடி, தர்ப்பைப் புற்கள், வில்வ இலைகள் மற்றும் மலர்களைக் கொண்டு குழியை முழுவதுமாய் நிரப்பிட வேண்டும். மூன்றடிக்கு மூன்றடி மேடை ஒன்றை அங்கு நிறுவ வேண்டும். அம் மேடை மீது ஒரு சிவலிங்கம் அல்லது ஓர் அரச மரக்கன்றைத் தாபிக்க வேண்டும். சமாதியின் சந்நிதி வடக்கு திசை அல்லது கிழக்கு திசை நோக்கி இருக்குமாறு அமைத்து, அதற்கு அன்புடன் பதினாறு வகையான உபசாரங்களையும் செய்ய வேண்டும் என்று திருமூலர் தனது திருமந்திரம் என்னும் நூலில் மிகவும் விளக்கமாக எடுத்துரைக்கிறார்.

ஜீவசமாதி உள்ள இடத்திற்க்கு சென்றால் மனம் அமைதியடையும். நோய்கள் தீரும். வேண்டுதல்கள் நிறைவேறும். நம்மால் நல்ல நுண்அதிர்வலைகளை அவ்விடத்திலே உணரமுடியும். வாழ்வில் நற்திருப்பங்களும் ஏற்படும்… இவை போன்ற பலன்கள் பலர் வாழ்வில் அனுபவப்பூர்வமாக நடக்கவே செய்திருக்கின்றன. ஜீவசமாதிகள் கோயில்களுக்கு இணையான தெய்விகத் தன்மை கொண்டவைகள் ஆகும். 

Comments

Add new comment